Rules and Regulationsadmin2020-04-03T12:20:40+00:00
மாணவர் சமுதாயத்தின் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் மாணவர்கள் கல்லூரி வளாகத்திலும், வெளியிலும் நன்முறையில் நடந்துகொள்ளவேண்டும்.
மாணவர்கள் அனைத்து நாட்களிலும் சீருடை அணிதல்வேண்டும்.
கல்லூரி வளாகத்திற்குள் முதன்முறையாகத் தங்கள் ஆசிரியர்களைக் காணும் மாணவர்கள் வணக்கம்செய்தல் பண்பாடாகும்.
மாணவர்கள் வகுப்புகளுக்குத் தவறாமல் குறித்த நேரத்தில் வர வேண்டும். காலம் கடந்துவரும் மாணவர்கள் துறைத்தலைவரின் இசைவு பெற்றபின்னரே வகுப்பறைக்குள் வரவேண்டும்.
மாணவர்கள் விடுப்பு எடுக்கும்போது விடுப்பு விண்ணப்பத்தைத் துறைத்தலைவரிடம் அளித்தல்வேண்டும்.
ஆசிரியரின் இசைவின்றி மாணவர்கள் வகுப்பைவிட்டு வெளியில் செல்லக்கூடாது.
கல்லூரிக் கட்டணம் செலுத்துதல், நூலகத்தில் நூல் பெறுதல் போன்ற காரணத்திற்காக மாணவர்கள் வகுப்பறையை விட்டுச் செல்லவோ, காலங்கடந்து வரவோகூடாது.
தங்கள் வகுப்பறைகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது மாணவர்களின் கடமையாகும்.
அனுமதியின்றி மாணவர்கள் முதல்வர் அறை, அலுவலகம், ஆசிரியர் அறைகள், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றிற்குள் செல்லக்கூடாது.
மாணவியர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளை ஓய்வு அறைக்கோ அல்லது அப்பகுதிக்கோ மாணவர்கள் செல்லக்கூடாது.
முதல்வரின் முன்ஓப்புதல் இன்றி கல்லூரியில் எந்தக் கூட்டமும் நடத்தவோ மாணவர்களிடையே எந்தவிதமான அறிக்கையையும் சுற்றுக்கு விடவோ அறிவிப்புப் பலகையில் எழுதவோ கூடாது.
மாணவர்கள் சாதி, மதம் அரசியல் கட்சி தொடர்பான வேறுபாடுகளைக் கல்லூரிக்குள் கொணர்ந்து பொது அமைதிக்குக் கேடான செயல்களில் ஈடுபடக்கூடாது. அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
முதல்வரின் அனுமதி பெறாமல் மாணவர்கள் எந்த மன்றத்திலோ, குழுவிலோ, சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது. இவ்விதிமுறைகட்கு முரணாக எம் மாணவரேனும் ஈடுபடுவதாக அறியவரின் அவர் கல்லூரியினின்றும் உடனே நீக்கப்படுவார்.
கல்லூரிச் சொத்துக்களைச் சேதப்படுத்துவது குற்றமாகும். வேண்டுமென்றோ, தற்செயலாகவோ கல்லூரிச் சொத்துக்களைச் சேதப்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அதற்கான தொகையும் வசூலிக்கப்படும்.
மாணவர்கள் தமக்குக் குறைகள் இருப்பின் தம் துறைத்தலைவரிடம் சென்று முதலில் முறையிடவேண்டும். மாணவர்கள் கூட்டமாக முதல்வரிடம் செல்லக்கூடாது.
கல்லூரி விதிகளை மீறும் மாணவர்களுக்குத் தண்டனை அளிப்பதில் முதல்வரின் முடிவே இறுதியானது.
கல்லூரி வளாகத்தின் உள்ளேயோ அல்லது வெளியிலோ பகடிவதை (ragging) செய்யும் மாணவர்கள்மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்படுகிறது.
கல்லூரி மாணவியர்களைக் கேலி செய்யும் (Eve teasing) மாணவர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஜாமீனில் வெளிவர இயலாதபடி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அறிவிக்கலாகிறது.
மாணவர்கள் (ஆண்கள்) கைகளில் கயிறு, ரப்பர்பேன்ட், காதில், கம்மல் பாசி மாலைகள் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது. சீராக முகச்சவரம் செய்து தலைமுடி வெட்டப்பட்டுக் கல்லூரிக்கு வருகைபுரிய வேண்டும். மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன் படுத்துவது தடை செய்யப்படுகிறது. மீறுபவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.